10 Nov 2011

சன் பிக்சர்ஸ் படங்களுக்கு தடை!!

சன் பிக்சர்ஸ் படங்களுக்கு தடை!!

இனிமேல் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அல்லது வெளியிடும் எந்த படத்தையும், தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய போவதில்லை என்று திரையரங்கு உரிமையாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் தலைவர் இராம.மு.அண்ணாமலை, பொதுச்செயலாளர் ஆர்.பன்னீர்‌ செல்வம், இணை செயலாளர் திருச்சி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் நடந்தது. இதில் சில தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.

அதன்படி சன் பிக்சர்ஸ் படங்களான எந்திரன், மாப்பிள்ளை, வேட்டைக்காரன், சுறா உள்ளிட்ட படங்களை திரையிட்ட வகையில் தியேட்டர் அதிபர்களுக்கு, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து டெபாசிட் எனப்படும் ரீ-பண்ட் தொகை திருப்பி தரப்படவில்லை. இதுதொடர்பாக சன்பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், அவர்களிடமிருந்து சரியான பதில் எதுவும் வரவில்லை. இதனை‌யடுத்து இனிமேல் சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் அல்லது வெளியிடும் எந்த படத்தையும் திரையிடபோவதில்லை என்றும், தொழில்முறையில் எந்தவொரு ஒத்துழைப்பும் தரப்போவதில்லை என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இதுதவிர தியேட்டர் கட்டணம் உயர்த்துதல், கேளிக்கை வரி, தியேட்டர்களில் கூடுதல் காட்சிகள் நடத்துதல், தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திரைப்படங்கள் இல்லாத காலத்தில் திருமணம், கண்காட்சி, பொதுக்கூட்டம் உள்ளிட்டவைகளை நடத்துவது தொடர்பாக தமிழக அரசிடம் அனுமதி பெறுதல் உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சன்பிக்சர்ஸ் படங்களுக்கு தியேட்டர் அதிபர்கள் விதித்திருக்கும் தடையால் முதலில் பாதிக்கப்படபோவது விக்ரமின் ராஜாபாட்டை படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.